மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் பகுதியில் விவசாயியான பச்சிராஜன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், கடையம், பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆம்பூர் செல்லும் சாலையில் இருக்கும் வயலில் பச்சிராஜன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதால் பச்சிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த வேலு என்பவரும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் வேலுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சிராஜனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.