சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்த பாடு இல்லை.
இந்த சூழலில் நேற்று இரவு 9:30 மணியளவில் இருந்து சென்னை, எழும்பூர், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, சர்மா நகர், கொடுங்கையூர், மூலக்கடை, மாதவரம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் போன்ற பெரும்பான்மையான இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதே போல் சென்னையின் புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை வாழ் மக்கள் நீண்ட நாட்களுக்கு பின் நேற்று குழுமையை உணர்ந்து இருக்கின்றனர். இத்துடன் வெக்கையின்றி மகிழ்ச்சியுடன் இரவில் தூங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.