உலகையே அடியோடு மாற்றியிருக்கிறது கொரோனா பரவல். பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வர உலக நாடுகள் போராடி வருகின்றனவோ அதே போல தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே உள்ள கடன்சுமை, அதற்கான வட்டி என ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில் என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது தமிழக அரசு. புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் மறுவாழ்வுக்கான கூடுதல் மானியம் போன்றவை இதில் அறிவிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிறு குறு தொழில்களை பொருத்தவரை புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் அதிக படுத்தப்பட்டுள்ளன. எனினும் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டியை ரத்து செய்ய நடவடிக்கைகள் வேண்டும் என சிறு குறு தொழில் முனைவோர் எதிர்பார்க்கின்றனர். இடைக்கால பட்ஜெட்டை பொருத்தவரை வருங்காலத்தை சார்ந்தே இருக்கும் என்றும், சீர்திருத்தங்கள் மூலம் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை உயர்த்துவதற்கான அம்சங்கள் இதில் இருக்கக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் கடன் சுமை ஒருபுறம், தேர்தலை சந்திப்பதற்காக புதிய அறிவிப்புகள் வெளியிட வேண்டிய கட்டாயம் மறுபுறம் என இக்கட்டான சூழலில் அரசு இருப்பதாக ஆடிட்டர்கள் கணிக்கின்றனர். தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பையும் திருப்திப்படுத்துவதோடு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாகவும் அமையுமா ? என்பதே கேள்வியாக உள்ளது.