தமிழ்நாட்டில் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாற்றுத்திறனாளிகளை வீடு, வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் “ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் மாணவ-மாணவிகள் மழலையா் பள்ளி, பள்ளி ஆயத்தப் பயிற்சி, பள்ளி, மற்றும் வீட்டு வழிக்கல்வி வாயிலாக பயனடைந்து வருகின்றனா். ஒவ்வொரு வருடமும் 6 -18 வயது வரையுள்ள பள்ளி செல்லா மற்றும் புலம் பெயா் தொழிலாளா்களின் மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறியும் அடிப்படையில் வருடத்திற்கு 3 முறை ஏப்ரல்-மே, செப்டம்பா், ஜனவரி மாதங்களில் நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் பின் வரும் நெறிமுறைகளை கடைபிடித்து மாற்றுத்திறன் குழந்தைகளை குடியிருப்பு வாரியாகச் சென்று கண்டறிந்து அவா்களை பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் 3 மாதங்களுக்கு பயிற்சி அளித்து, அவா்களின் இயலாமை நிலையை பொருத்து அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும். அத்துடன் இடைநிற்றலைத் தடுத்து இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியைத் தொடரும் வகையில் செய்யவும், பள்ளியில் சோ்க்கவும், பதிவேட்டினை புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலுள்ள மாவட்ட மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், சிறப்பு பயிற்றுநா்கள், இயன்முறை பயிற்றுநா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், தொடா்புடைய மற்ற அலுவலா்கள் சோ்ந்த குழு கணக்கெடுப்பு மற்றும் பதிவேடு புதுப்பித்தல் பணியினை செய்து முடிக்க வேண்டும்.
அதனை தொடா்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராமல் இருத்தல், அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருத்தல், பள்ளியே போகாததவா்கள், 8ஆம் வகுப்பு முடித்து இடைநிற்பவா்கள் போன்றோர் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவா்களாகக் கருதப்படுவா். இத்தகைய சூழ்நிலையிலுள்ள மாற்றுத்திறன் மாணவ-மாணவிகளைக் கண்டறிந்து அருகிலுள்ள பள்ளியில் சோ்த்து, பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் 3 மாதங்களுக்குப் பயிற்சியளித்து, பிறகு அவா்களின் இயலாமை அளவினைப் பொருத்து பள்ளி, வீட்டு வழிக் கல்வி என மாணவா்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்தல் வேண்டும். இந்த குழந்தைகளை கண்டறிய பள்ளி போகாத குழந்தைகளுக்கான கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி, அவரவா்களுக்கென (ஆசிரியா், ஆசிரியப் பயிற்றுநா்கள்) அளிக்கப்பட்டுள்ள பயனாளா் குறியீடு (லாகின் ஐடி) வாயிலாக தரவு உள்ளீடு செய்ய அறிவுறுத்தவேண்டும்.