Categories
மாநில செய்திகள்

இணையதளத்தில் வெளியான வினாத்தாள்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் வினாத்தாள் வெளியாவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்றார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திலும் இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெற்றது.

இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு மார்ச் மாதத்திலும், இரண்டாம் திருப்புதல் தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது 12- ம் வகுப்புக்குரிய  இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் 10-ம் வகுப்புக்குரிய அறிவியல் வினாத்தாள் ஆகியவை இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு வினாத்தாளும் இணையத்தளத்தில் வெளியானது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இனி வினாத்தாள்கள் ஜன்னல் இல்லாத ஒரு அறையில் வைக்கப்படும் எனவும், வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் வெளியே  துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறினார். இந்த தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக 3,050 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்படும். மேலும் தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், வினாத்தாள்களை இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |