சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மற்றும் அழகப்பா அரசு கலை கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சார்பில் கல்லூரி முதல்வர் துரை தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவ மாணவிகள் காரைக்குடி ஆரிய பவன் சந்திப்பிலிருந்து கல்லூரி சாலை வழியாக அழகப்பா அரசு கலை கல்லூரிக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்போது இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படியும், முழக்கங்களை எழுப்பியும் மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது, ஆன்லைனில் பரிசுகள் விழுந்திருப்பதாக கூறி பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. பண மோசடி குறித்து 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம். இதனை அடுத்து ஆன்லைன் மூலம் முன்பின் அறியாதவர்களிடம் மாணவிகள் பேசுவதையும், விவரங்களை தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும். சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்தும் போது மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.