12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரனா பரவல் காரணமாக கடந்த வருடம் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த வருடம் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றது.
இதனையடுத்து இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும். ஆனால் நாளை நடைபெறவிருக்கும் கணிதத் தேர்வுக்குரிய வினாத்தாள் இணையதளத்தில் வெளியானது. இதன் காரணமாக மாணவர்கள் திருப்புதல் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பத்தில் இருந்தனர். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். அதாவது நாளை மாற்று வினாத்தாள் ஏற்பாடு செய்யப்பட்டு கணிதத் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளார். மேலும் திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் பொதுத்தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறியுள்ளார்.