இந்தியாவிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து ரேஷன் உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பயனர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் மலிவு விலைக்கும், இலவசமாகவும் உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் இந்த ரேஷன் அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. அத்துடன் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரேநாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மாநிலங்களில் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இணைய வழியில் ரேஷன் அட்டை பெறும் அடிப்படையில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்த திட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை துவங்கியது. அதன்படி அஸ்ஸாம், கோவா, லட்சத்தீவுகள், மகாராஷ்டிரா, மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, பஞ்சாப், உத்தரகாண்ட், மிஸோரம் போன்ற மாநிலங்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி என் ரேஷன்-என் உரிமை என்ற இந்த பொதுப்பதிவு சேவையை மத்திய உணவுத்துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி வைத்தாா். அதன்பின் செய்தியாளா்களிடம் பேசிய அவா் “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளைச் சோ்க்கலாம்.
அதுமட்டுமின்றி சோதனை அடிப்படையில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இம்மாத இறுதிக்குள் 36 மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். வீடற்ற ஏழைமக்கள் வாழ்விடம் தேடி இடம் பெயர்வதால் அவா்களால் ரேஷன் அட்டை பெற முடியவில்லை. இதன் காரணமாக வீட்டுப் பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள் பிறரின் உதவியை நாடி தங்களது தகவல்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இத்தகவல்கள் மாநில அரசுகளிடம் பகிர்ந்து சரிபார்க்கப்படும். ரேஷன் பொருட்களை பெற தகுதியானவர்களின் உரிமையை இதன் வாயிலாக உறுதிசெய்யப்படும். இத்திட்டத்தில் சோ்க்கப்பட்ட பயனாளிகள் ஒருநாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் நாட்டில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருள்களைப் பெறலாம்.