நள்ளிரவு நேரத்தில் ஸ்மார்ட்போனில் படம் பார்த்து கொண்டிருந்த இளைஞன் 75 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த குணால் மோகித் என்பவர் நள்ளிரவு நேரத்தில் தனது ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று தங்கள் இரண்டு மாடி குடியிருப்பில் இருந்த குணால் எப்போதும் போல் இரவு ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டின் சமையலறையில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால் குணால் சுதாரித்துக்கொண்டு தனது வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்களை எழுப்பி எச்சரித்ததோடு மற்ற குடியிருப்பில் இருந்தவர்களையும் வெளியேறுமாறு தகவல் கொடுத்தார்.
குடியிருப்பில் இருந்த 75 பேரும் எந்த ஒரு ஆபத்தும் இன்றி வெளியேறிய அடுத்த நொடி குடியிருப்பு முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. குணால் தூங்காமல் இருந்ததால் அனைத்து குடும்பமும் உயிர் பிழைத்தது. இல்லை என்றால் குணால் உட்பட அனைவரும் மண்ணில் புதைக்கப்பட்டு இருப்பார்கள். இந்த குடியிருப்பில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் 9 மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்தினர். ஆனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் காலதாமதம் செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.