பிரிட்டன் அரசு டிரைவ் த்ரூ என்ற புதிய திட்டத்தின் மூலம் கொரோனா தடுப்பூசியினை போடா இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரிட்டனிலும் முதற்கட்டமாக மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பணியை வேகப்படுத்துவதற்காக பிரிட்டன் அரசு டிரைவ் த்ரூ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
ஏற்கனவே பிரிட்டன் அரசு 125 கொரோனா பரிசோதனை மையங்களை டிரைவ் த்ரூ திட்டத்தின் மூலம் அமைத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வந்துள்ளது. அந்தவகையில் தற்போது தடுப்பூசி போடும் பணியிலும் இந்த திட்டத்தினை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒருவர் நேரத்தை மிச்சப்படுத்த காரை விட்டு இறங்காமலே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அதுமட்டும் இன்றி தடுப்பூசி போடும் பணிகளும் விரைவாக நடைபெறும் என்று தேசிய சுகாதார சேவை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் பிரிட்டன் அரசு கொரோனா தடுப்பூசிகளோடு சேர்ந்து காய்சல் தடுப்பூசிகளையும் போட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்வதால் மட்டும் பிரிட்டன் மக்களின் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணியினை நிறுத்த முடியாது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.