முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது என கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேரில் சந்தித்து மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று மனு ஒன்றை அளித்துள்ளார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உள்ளாட்சித்தேர்தலானது இன்னும் நான்கு மாதத்தில் வரவுள்ள நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம்.
மேலும் மாநகராட்சி தேர்தலானது விரைவில் நடக்க உள்ளதால் தமிழக அரசு மக்களுக்கான திட்ட பணிகளை வேகமாக செயல்படுத்திட 1000 கோடி ரூபாயை மதுரை மாநகராட்சி ஒதுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம். மதுரையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசிடம் மதுரை வளர்ச்சி பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எனது கோரிக்கையை வைக்கிறேன். கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட நலப்பணிகள் தற்பொழுது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களின் பயன்பாட்டிற்காக திட்டங்களை விரைந்து செயலாற்றி முடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.