எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ஆவின் நிறுவனத்தின் நோக்கமே குறைந்த விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவது தான். ஆனால் கடந்த 9 மாதங்களில் மட்டும் மூன்று முறை தி.மு.க அரசு நெய்யின் விலை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். அதாவது கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் நெய் தற்போது ரூ.115 அதிகரிக்கப்பட்டு ரூ.630 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இனி பணக்காரர்கள் மட்டுமே நெய்யினை வாங்கி பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு இந்த தி.மு.க அரசு தள்ளி ஏழை மற்றும் நடுத்தர வாகத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாக்கனியாகி உள்ளது. இந்நிலையில் இன்று வெண்ணெய் விலையும் கிலோவிற்கு ரூ.20 அதிகரித்துள்ளனர். எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலமாகத்தான் பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது அது கூட ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?” என எடப்பாடி பழனிச்சாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.