நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் பகுதியில் லூயிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜார்ஜ் லூர்துராஜ் (24) என்ற மகன் இருந்தார். இவர் வேளாங்கண்ணிக்கு கடந்த 7-ஆம் தேதி வந்துள்ளார். அதன்பின் அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார். அதன்பின் கடந்த 10-ஆம் தேதி பணியாளர்கள் விடுதியை காலி செய்வதற்காக ஜார்ஜ் லூர்துராஜ் தங்கியிருந்த அறையை தட்டினர். அப்போது அறையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பணியாளர்கள் சந்தேகம் அடைந்து வேளாண்கன்னி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஜார்ஜ் லூர்துராஜ் அறையில் உள்ள கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அதன்பின் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிந்து ஜார்ஜ் லூர்துராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.