பிரித்தானிய மன்னராக சார்லஸ் முடிசூட்டும் விழாவானது அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என தெரிய வந்துள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த விழாவிற்கான தேதியும் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் மறைந்த ராணியாருக்கு முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையும். இதனால் ஜூன் மாதத்தில் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவும் முன்னெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகின்றது.
மகாராணியாரின் நல்லடக்கம் முடிந்து 48 மணி நேரத்திற்குள் முடிசூட்டு விழாவிற்கான திட்டமிடல் துவங்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜூன் 2ஆம் தேதி, 1953ல் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக்கொண்டார். இதனால், தாயார் மீதான பாசம் காரணமாக மன்னர் மூன்றாம் சார்லஸும் அதே நாளில் முடிசூட்ட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அப்போதைய உலக நிகழ்வுகளை பொறுத்தே தேதி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். தற்போது மன்னர் சார்லஸ் தமது மனைவியுடன் ஸ்காட்லாந்தில் பால்மோரல் மாளிகையில் தங்கியுள்ளார்.
கடந்த 11 நாட்களும் மன்னர் சார்லஸுக்கு மிகவும் கடுமையானதாக இருந்தது எனவும், அவர் சோர்ந்து காணப்படுகின்றார் எனவும் கூறுகின்றனர். இதனாலையே தற்போது பால்மோரல் மாளிகைக்கு அவர் திரும்பியதாகவும், ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், அலுவலகங்களிலும் அவர் ஈடுபட இருப்பதாக அரண்மனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் இந்த ஒருவார காலம் தனிப்பட்ட துக்கமனுசரிப்பில் செலவிடுவதால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மன்னர் சார்லஸ் தமது அலுவலக பணிகளை முன்னெடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.