சிவகங்கையில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க கோரியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,679 வாக்கு பதிவு மையங்கள் உள்ளன. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணி புரிவதற்காக ஒரு மையத்திற்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 59 பேர் இந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மருத்துவ காரணங்களால் 330 பேர் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரி இருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் விலக்கு அளிப்பதற்காக கூறிய காரணங்கள் சரிதானா ? என்பது குறித்து கண்டறிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விலக்கு கோரியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் விலக்கு கோரியவர்களுக்கு பரிசோதனை செய்து சான்றிதழ் அளித்தனர். அதில் சான்றிதழ் வழங்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தேர்தலில் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.