மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் நாகையில் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
மீனவ கிராமங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதனால் மீன்பிடி தொழில் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு வருமான இழப்பீடு ஏற்பட்டது. மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் மீனவர்கள் வலைகளை சீரமைத்தல், விசைப்படகுகளில் பழுது நீக்குதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவார்கள். தமிழக அரசு சார்பில் இந்த காலத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நாகை மீனவர்கள் இந்த நிவாரண தொகை போதுமானதாக இல்லை என தெரிவித்து மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.10,000 ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விசைப்படகு மற்றும் வலைகளை சீரமைக்க ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.