லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்களை சூப்பிரண்டு இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் ஆனைகட்டி பகுதியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் வாழை நாரில் யோகாசன பாய் தயாரித்து வருகின்றனர். இந்த பாயின் ஓரங்களை தைப்பதற்கு சின்ன தடாகத்தை சேர்ந்த டெய்லர் ஐயப்பன் என்பவர் அங்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் ஆனைகட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள மாங்கரை சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் ஐயப்பனை தடுத்து நிறுத்தி யோகாசன பாய்களுக்கான ரசீது உள்ளதா என கேட்டுள்ளனர்.
அதற்கு ஐயப்பன் தன்னிடம் பதிவு இல்லை என கூறியுள்ளார். இதனையடுத்து ரசீது இல்லாமல் எந்த பொருளையும் கொண்டு செல்லக்கூடாது என கூறி ஐயப்பனிடம் இருந்த 1500 ரூபாய் மதிப்புள்ள யோகாசன பாய்களை காவல்துறையினர் பறித்துவிட்டு அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மைய நிர்வாகி சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தடாகம் போலீஸ் ஏட்டு முத்துசாமி என்பவர் ஐயப்பனிடம் யோகாசன பாய்களை பறித்தது தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தடாகம் போலீஸ்காரர்களான கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து யோகாசன பாய்களை பறித்த எட்டு முத்துசாமியை கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் லஞ்சம் வாங்கிய கார்த்திகேயன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கோவைபுதூர் போலீஸ் பாட்டாலியனுக்கு இடமாற்றம் செய்துள்ளார்.