திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே 1,000 வருடம் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்திரை திருவிழா ஆகியவை ராஜதானி பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் சார்பில் வருடந்தோறும் நடைபெற்று வந்தது. இதுதவிர பல்வேறு பண்டிகைகளின் போது வழிபாடு நடைபெற்று வந்தது. இந்த கோவில் தற்போது இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்து இருந்தாலும், ஆகம விதிகளின்படி பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கிராம மக்கள் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பாலாலய பூஜை நடத்தி கோவில் சீரமைப்பு பணிகளை செய்யத் தொடங்கினர். இதற்கிடையே கோவில் சீரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் இந்து அறநிலையத்துறைக்கு இந்த கோவில் சொந்தமானது என்றும் புனரமைப்பு பணிகளை இதில் மேற்கொள்ள கூடாது என்று தடை விதித்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் முன்பு நேற்று முன்தினம் திரண்டனர். அப்போது கோவில் சீரமைப்பு பணிக்கு தடை விதித்த இந்து சமய அறநிலையத் துறையினரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் 20-க்கும் மேற்பட்டோர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் கலந்து கொண்டனர். இதையடுத்து இந்து முன்னணி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் ராஜதானி காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் மனு அளிக்கப்பட்டது.