திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சி உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைகளை இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்குவதில் பாரபட்சம் உள்ளது. மேலும் சுழற்சி முறை, பணித்தள பொறுப்பாளர் நியமனத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை.
எனவே இதற்கு அந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி தாலுகா காவல் துறையினர் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்களின் புகார்களை எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.