தலிபான் பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்க படையினர் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் பலரும் விமான நிலையத்திற்குள் நுழைய கூட்டம் கூட்டமாக சென்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்ததாகவும், பலர் பலத்த காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அரசு காபூல் விமான நிலையத்திற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தலிபான்கள் அமைப்பு விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அமெரிக்கர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தலிபான் அதிகாரி அமீர் கான் முதாகி “அமெரிக்கா மக்களை ஒழுங்குபடுத்த தவறி விட்டதாகவும், ஆப்கானிஸ்தான் முழுவதும் அமைதியான சூழல் நிலவும் போது காபூல் விமான நிலையத்தில் மட்டும் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.