சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அண்ணாநகரில் திருச்செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்பவருக்கும் இடையே மீன்கடை வைப்பதில் காரைக்குடி வாரச்சந்தையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துமணியும், திருச்செல்வமும் வாரச்சந்தை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் சரமாரியாக குத்திக் கொண்டனர். அதில் திருச்செல்வம் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
மேலும் முத்துமணிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் திருச்செல்வம் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த முத்துமணியை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் அவர் அங்கிருந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.