“குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் “என்ன சொல்ல போகிறாய்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் விழா நிகழ்ச்சியின் போது அஸ்வின் பேசிய வார்த்தைகள் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது அஸ்வின் “எனக்கு படத்தின் கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கி விடுவேன். அப்படி இதுவரை கிட்டத்தட்ட 40 கதைகளை கேட்டு நான் தூங்கி விட்டேன்.
ஆனால் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் கதையை மட்டும் நான் தூங்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த காரணத்தினால் மட்டும் தான் இந்த படத்திலும் நடித்தேன்” என கூறினார். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஸ்வினை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இதன் காரணமாக “என்ன சொல்ல போகிறாய்” படமும் டிசம்பர் மாதம் வெளியாகாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அஸ்வின் தற்போது யாத்தே ஆல்பம் பாடலின் விழா நிகழ்ச்சியின் போது உருக்கமாக பேசியுள்ளார். அதாவது அஸ்வின் “சமூகவலைதளங்களில் ஆல்பம் படத்தில் நடிக்கும்போது விரைவில் வெளியாக உள்ளது என்று பதிவிடுவேன். சிலர் என்னைப் பார்த்து எந்த படத்தில் நடிக்கிறாய் என்று கேட்பார்கள்.
அதுக்கு நான் படமில்லை ஆல்பம் என்று கூறுவேன். அதற்கு இதுக்கு தான் இந்த பந்தாவா என கேட்டு அனைவரும் கேலி செய்தார்கள். அப்போதெல்லாம் நான் மனமுடைந்து போனேன்” என்று உருக்கமாக பேசியுள்ளார். மேலும் தற்போது ஒரு ஆல்பம் பாடலுக்கு இப்படி ஒரு பிரம்மாண்டமான விழா எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.