திண்டுக்கல்லில் மின்வாரிய ஊழியரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்பட்டியில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டில் அனுமதி இல்லாமல் முறைகேடாக மின் இணைப்பு இருப்பதை மின்வாரிய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். இதையடுத்து ரூ.15,000 ஜெயபாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான ரங்கசாமி தான் அபராதம் விதிக்கப்பட்டதற்கு காரணம் என ஜெயபால் எண்ணினார்.
இதையடுத்து அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ரங்கசாமியை, ஜெயபால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் ரங்கசாமிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து ரங்கசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.