பெரம்பலூரில் அரிசி மூட்டைகளுடன் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியின் முன் நின்றுகொண்டிருந்த லாரியை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக அரசி கிட்டங்கி, பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ளது. தினமும் அரிசி மூட்டைகள் கிட்டங்கில் பொதுவிநியோக திட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து அதன் பின் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி காஜாமலையிலிருந்து கடந்த 29-ஆம் தேதி அன்று இரவு விமான நிலையப்பகுதி ஸ்டார் நகரில் வசித்து வரும் மனோகர் என்பவருடைய லாரியில் துறைமங்கலத்தில் உள்ள கிடங்கிக்கு 500 அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. திருச்சி விமான நிலைய பகுதி அந்தோணியார் கோவில் தெருவில் வசித்து வரும் பிரபாகரன் என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். லாரியை நள்ளிரவில் கிட்டங்கி முன்பு நிறுத்தினார். ஏற்கனவே வந்த லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை, கிட்டங்கியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கி கொண்டிருந்தனர்.
இதையடுத்து இந்த லாரியிலும் அரிசி மூட்டைகளை இறக்க வசதியாக டிரைவர் பிரபாகரன் லாரி சாவியை வண்டியிலேயே வைத்து விட்டு தூங்க செல்வதாக தொழிலாளர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் சாவி லாரியிலேயே இருந்ததால் அதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இதனையறிந்த லாரி டிரைவர் பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து லாரியின் உரிமையாளரான மனோகரனுக்கு தகவல் அளித்தார். அவர் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் அந்த லாரி எசனை ஏரிக்கரையில் நின்றுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு கிராம நிர்வாக அலுவலர் அகிலன் தகவல் அளித்துள்ளார்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அரிசி மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த லாரியை பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கைப்பற்றி கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் 11 அரிசி மூட்டைகள் லாரியிலிருந்து திருடு போயிருந்தது தெரியவந்தது. லாரியை கடத்திச் சென்றவர்கள் லாரியை மேலும் கடத்தி கொண்டு சென்றால் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து லாரியை அரசியோடு கடத்தி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.