வடமாநிலத்தை சேர்ந்த அசோக் தாஸ்(32) என்பவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் அவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வருவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பினார். நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து ஈரோட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.
ஈரோடு ரயில் நிலையம் வந்தது அவருக்கு தெரியவில்லை. அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் ரயில் நிலையம் வந்ததை அவர் அறியாமல் இருந்துள்ளார். அவர் வந்த ரயிலும் சிறிது நேரம் நின்றுவிட்டு திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. திடீரென்று கண் விழித்த அவர் ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை விட்டு மெதுவாக செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதனால் பதறிப்போன அவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நடைமேடைக்கு முறைகளுக்கும் இடையே விழும் நிலையில் தடுமாறினார். அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர்கள் பழனிச்சாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரை சாமர்த்தியமாக மீட்டனர். இந்த காவலர்கள் பயணியை காப்பாற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவர்களை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.