திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் பதினொன்றாம் வகுப்பு மாணவன் கட்டிலுக்கு மெத்தை வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு முத்துநகரில் வில்சன் செபாஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபியா செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இன்பென்ட் (17) என்ற மகன் இருந்தார். இவர் பதினொன்றாம் வகுப்பு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வில்சன் செபாஸ்டின் வேலைக்கு சென்ற பின் இன்பென்ட் தனது தாய் சோபியா செல்வராணியிடம் கட்டிலுக்கு மெத்தை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் தந்தை வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்தவுடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத இன்பென்ட், செல்வராணியிடம் உடனடியாக வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
மேலும் வீட்டில் உள்ள படுக்கையறைக்கு சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்ட இன்பென்ட் காலை 11 மணியிலிருந்து 3 மணிவரை அறையை திறக்கவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த செல்வராணி ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது மின்விசிறியில் மாணவன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து சோபியா செல்வராணி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.