மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பனை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள மணியனூரில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி தொழிலாளியான இவருக்கு அதே பகுதியில் சரவணகுமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சரவணக்குமார் அடிக்கடி மது அருந்துவதற்காக கணேசனிடம் பணம் கேட்பது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று கணேசனும், சரவணகுமார் அப்பகுதி உள்ள கோவில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சரவணகுமார் மது குடிப்பதற்காக கணேசனிடம் பணம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து கணேசன் பணம் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணகுமார் அங்கு கிடந்த கட்டையை எடுத்து நண்பர் என்றும் பாராமல் கணேசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்த கணேசனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கணேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினர் சரவணகுமார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.