Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுங்க அட்டகாசம் தாங்க முடியல… சீக்கிரம் நடவடிக்கை எடுங்க… கிராம மக்கள் கோரிக்கை..!!

மயிலாடுதுறையில் கிராமங்களில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காட்டுச்சேரி தரங்கம்பாடி, பொறையாறு, திருக்களாச்சேரி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகள் தொல்லை தற்போது அதிகமாக உள்ளது. இவை வீடுகளில் உள்ள தோட்டத்தில் பலா, மா, வாழை ஆகியவற்றை பறித்து சாப்பிடுவதோடு அதிக அளவில் வீணாக்கி விடுகிறது. சில வீடுகளில் குடிநீர் பைப்புகளை உடைத்து, உணவு பொருள்களை சாப்பிட்டு விட்டு செல்கிறது. மேலும் டிவி ஆண்டனாவில் ஏறி உட்கார்ந்து அதையும் உடைத்து விடுகிறது. அதனை விரட்ட முயன்றால் அவர்களை கடிக்க வருகிறது. எனவே வீட்டின் கதவை எப்போதும் பூட்டியே வைக்க வேண்டியுள்ளது. இதனால் விளையாடுவதற்காக குழந்தைகள் வெளியில் செல்லக்கூட அஞ்சுகிறார்கள். குரங்குகளின் அட்டகாசத்தால் சங்கரன்பந்தல், பொறையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

வீட்டின் கதவுகளை வெயில் காலத்தில் கூட காற்றோட்டத்திற்காக திறந்து வைக்க முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். அங்கு முன்பு 5 முதல் 6 குரங்குகள் வரை மட்டுமே கிராமங்களில் தென்பட்டன. ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான குரங்குகள் கிராமங்களில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த குரங்குகளை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகமும் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு கிராமங்களில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |