உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ வீரரிடம் அந்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பி கடுங்கோபத்துடன் வாதிடுவது தொடர்புடைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைனுக்குள் போர் தொடுத்த ரஷ்யா 2 ஆவது நாளான இன்றும் தங்களது வேலையை தொடர்ந்து காண்பித்து வருகிறது. இதனையடுத்து உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க உக்ரேனின் தலைநகரான கீவ் நகரம் முழுவதும் இரவு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. ஆகையினால் உக்ரைன் கீவிற்குள் நுழைந்த ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருவதை தடுப்பதற்காக அந்நாட்டை இணைக்கும் பாலங்கள் மற்றும் சாலைகளை வெடிக்க செய்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனை சேர்ந்த பெண்மணி ஒருவர் கீவ் நகருக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய ரஷ்ய வீரரிடம் உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் உக்ரைனை சேர்ந்த பெண் ஒருவர் ரஷ்ய வீரரை பார்த்து நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வீரன் தங்களுக்கு இங்கே வேலை உள்ளது என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட அந்தப் பெண் உக்கிரமாக பாசிசவாதிகளே உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் நம்முடைய இந்த பேச்சால் எந்த பயனும் இல்லை என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொஞ்சம் கூட சமாதானமாகாத அந்தப் பெண் ரஷ்ய வீரரிடம் மனதை உருக்கும் அளவிற்கு விஷயம் ஒன்றை பேசியுள்ளார். அதாவது ரஷ்ய வீரர்கள் அனைவரும் பாக்கெட்டில் சூரியகாந்தி விதையை போட்டுக்கொள்ளுங்கள். அதன்பிறகு நீங்கள் அனைவரும் சுட்டு வீழ்த்தியவர்களை மண்ணில் புதைக்கும் போது அந்த விதையையும் சேர்த்து போட்டால் அது தானாக வளரும் என்று கூறியுள்ளார். அந்த பெண்மணி கூறிய சூரியகாந்தி மலர் உக்ரைன் நாட்டின் தேசிய மலர் என்பது குறிப்பிடத்தக்கது.