இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகளில் 17 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில் மதுரை சொக்கலிங்கம் நகரை சேர்ந்த 10- ஆம் வகுப்பு மாணவி கனிஷ்கா 16 வயது உட்பட்டவர்களுக்கான பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மாணவி கனிஷ்கா கூறியதாவது, கடந்த 6 வருடங்களாக செஸ் விளையாடி வருகிறேன்.
தினமும் 10 முதல் 15 மணி நேரம் இதற்காக பயிற்சி பெற்று மாநில அளவில், தேசிய அளவிலும், சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்து பதக்கங்களை பெற்றேன். ஆசிய அளவிலான செஸ் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கமும், ருமேனியாவில் நடந்த உலக அளவிலான போட்டியில் ஆறாவது இடத்தையும் பெற்றேன். கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பதே எனது ஆசை என கூறியுள்ளார். இந்த மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.