தின்னர் டப்பா வெடித்து சிதறியதால் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டியில் இருக்கும் இந்தியன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 20 லிட்டர் எடை கொண்ட தின்னர் டப்பாவை கட்டுமான தொழிலாளர்களான மஞ்சுநாத் மற்றும் காளி ஆகிய 2 பேரும் கீழ் தளத்திற்கு இறக்கி கொண்டிருந்தனர். அப்போது தின்னர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து வெடித்து சிதறியதால் மஞ்சுநாத் மற்றும் காளி ஆகிய 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 3 மாதங்களுக்கும் மேலாக தின்னர் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.