நகராட்சிக்கு சொந்தமான கடை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது . இந்த வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. ஆனால் சமீபத்தில் வாடகை உயர்த்தப்பட்டதால் அனைத்து கடைகளும் காலியாக உள்ளது. இதனால் சிலர் அங்கு வந்து சீட்டு விளையாடிவிட்டு செல்கின்றனர். இதனால் அனைத்து கடைகளும் குப்பை மயமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மேல் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நிண்ட நேரம் போராடி தீயை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கடையில் இருந்த பழைய டி.வி ஒயர் போன்ற அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது. இந்த கடைகளில் சமூக விரோதிகள் அதிக அளவில் உலாவி வருகின்றனர். தற்போது அவர்கள் அணைக்காமல் போட்ட சிகரெட் துண்டால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளனர்.