வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு கொடுக்கும் பரிசு சொத்துவரி உயர்வு என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அம்மா மினி கிளினிக், குடிநீர் திட்டம், இலவச லேப்டாப் திட்டம் தொடருமா என்ற கேள்விஎழுந்துள்ளது. சென்ற 2018 அதிமுக ஆட்சியில் சொத்துவரி 50 % ஆக உயர்த்தப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இது வரி உயர்வா, சொத்து அபகரிப்பா என்று கேட்டார். ஆகவே அன்று ஊரக, நகர்ப்புற தேர்தல் நடத்தியபோது நிர்வாக வசதிக்காக வரி விதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புறதேர்தல்கள் முடிவடைந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்வான நிலையில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதை அரசு திரும்பபெற வேண்டும். தற்போது தி.மு.க ஆட்சியில் விலைவாசி அதிகரித்துவிட்டது. மேலும் பெட்ரோல், டீசல் விலையை ரூபாய் 3 குறைப்பதாக கண்துடைப்பிற்காக தெரிவிக்கிறார்கள். 10 ஆண்டுகளாக அதிமுக ராம ராஜ்ஜியம் நடத்தி மக்களை நன்றாக வைத்து இருந்தது. ஆனால் தி.மு.க ஆட்சியால் தமிழ்நாடு கலியுகமாக மாறிவிட்டது என்று கூறினார்.