பிரான்ஸ் நாட்டில் 75 வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரவத்துக்குரிய நாடாக இந்தியா பங்கேற்றுள்ளது. இந்த விழா மத்திய மந்திரி அனுராக் தாகூர் தலைமையில் இந்திய திரை பிரபலங்கள் ஏ.ஆர். ரகுமான், நவாஸீதீன் சித்திக், ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோன், இயக்குனர் பா.ரஞ்சித், தமன்னா மற்றும் நயன்தாரா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றனர். கேன்ஸ் விழாவில் ஆர்.மாதவன் இயக்குனராக அறிமுகமாகி ராக்கெட்ரி தி நம்பி எஃபக்ட் திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.
அதன் பிறகு நடிகர் மாதவன் பிரதமர் மோடியை பாராட்டி புகழ்ந்து பேசினார். அதில், நரேந்திர மோடி நாட்டில் பொருளாதார நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்தினார். அப்போது பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது ஒரு விவசாயிக்கும், படிக்காத ஏழை,எளிய மக்களுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி ஆன்லைன் கணக்கு பற்றி எப்படி சொல்லித் தரப் போகிறார்கள்? என்று கேள்விகள் எழுந்தது.
இந்த முயற்சி இந்தியாவுக்கு பொருளாதாரத்தில் மிகப்பெரிய பேரழிவை தரப்போகிறது என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த கதையே மாறிப் போனது. இப்போது உலகிலேயே இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தை பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. இது ஏன் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?. ஏனென்றால் இந்திய விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி கற்று தர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதுதான் புதிய இந்தியா என்று அவர் கூறினார். மேலும் மாதவன் பேசிய இந்த வீடியோவை மத்திய மந்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.