ஓ.பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலும், ப.ரவீந்திரநாத் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தபோது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், ஆண்டு வருமானம், விவசாய நிலங்கள், கல்வித்தகுதி, கடன் உள்ளிட்டவை குறித்த விவரங்களை தவறாக தெரிவித்துள்ளனர் என்று திமுக நிர்வாகி மிலானி என்பவர் மனு ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள எனக்கு பாதுகாப்புக்கு காவல்துறை வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் இருவர் மீதும் CRPC-190,200 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர போதுமான சாட்சியங்கள் இருப்பதாக கூறி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.
அதேபோல் மிலானி என்பவருக்கு சாட்சிய பாதுகாப்பு சட்டம் 2018-ன் கீழ் உரிய பாதுகாப்பினை வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் 7.02.2022 அன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.