வள்ளுவப் பெருந்தகையை மதத்திற்குள் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல என்றும், தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்த தவறை சரிசெய்ய வேண்டும் எனவும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திரு. டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல என்றும், அதிலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியே இப்படியொரு தவறு செய்வது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.
வள்ளுவர் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானவர் – அவரது சிந்தனைகள், மதங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் பின்பற்றத்தக்கவை – திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அதிலும் குறுகிய எண்ணத்தோடு செயல்படக்கூடாது என தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்தத் தவறை சரிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.