ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காவல்துறை மற்றும் அதிகாரிகள் உதவியுடன் பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதல்வர் திரு.உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், மொத்தமுள்ள 280 இடங்களில், குப்கர் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க 75 இடங்களில் வெற்றி கண்டிருக்கிறாது. சுயேச்சைகள் 49 இடங்களையும், காங்கிரஸ் 26 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் திரு.உமர் அப்துல்லாவின் Jammu & Kashmir National Conference கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண் ஒருவர், பாஜகவுக்கு ஆதரவு கட்சியான Jammu and Kashmir Apni -ல் இணைந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திரு.உமர் அப்துல்லா, குப்கர் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை, பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளால் ஏன் ஏற்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருதாகவும் குற்றம் சாட்டினார். ஜனநாயக முறைப்படி தங்களுக்கு கிடைத்த வெற்றியை, பறிக்க பாஜக முயற்சிப்பதாகவும் திரு.உமர் அப்துல்லா குற்றம் சாட்டினார்.