தனுஷ்கோடி 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் 13 மணல் திட்டுகள் உள்ளது. இதில் 5-வது மணல் திட்டுடன் இந்திய கடல் எல்லைப் பகுதி முடிவடைந்து விடுகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி அருகே உள்ள 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் படகு ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சுங்கத்துறை துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட படகை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில் இலங்கை புத்தளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் படகு என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த படகில் பொருட்கள் ஏதேனும் கடத்தி வரப்பட்டதா அல்லது கடத்தல்காரர்கள் யாரேனும் ஊடுருவி வந்தார்களா என பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சுங்கத் துறையினர் பிளாஸ்டிக் படகை மீனவர்களின் உதவியுடன் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் இதுகுறித்து கியூ பிரிவு, உளவுத்துறை மற்றும் கடலோர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.