அட்டைப் பெட்டிக்குள் ரூபாய் ஒரு கோடி வைத்ததாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூபாய் 10 லட்சத்தை மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சித்தோடையில் வசித்து வருபவர் 49 வயதுடைய செந்தில்குமார். இவருடைய மனைவி 42 வயதுடைய ஸ்ரீதேவி. இந்த தம்பதிகளுக்கு 19 வயதுடைய ரமணா என்ற மகன் உள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பி காம் 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். செந்தில்குமார் மொத்தமாக பழங்களை எடுத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் செந்தில் குமாருக்கு தொழிலை விரிவுபடுத்துவதற்கு ரூபாய் 2 கோடி பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் செந்தில்குமார், அவர் மனைவி ஸ்ரீதேவி ஆகிய 2 பேரும் சேர்ந்து செல்போன் எண்ணை பேஸ்புக்கில் போட்டு பதிவு செய்து வைத்துள்ளனர்.
இதை பார்த்த கோவையை சேர்ந்தவர்கள் இரண்டு பேர் ஸ்ரீதேவியை போனில் தொடர்பு கொண்டு கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேசுவதாக கூறி தங்களது பெயர் கௌதம், மார்ட்டின் என்று அறிமுகமானார்கள். நீங்கள் கேட்கின்ற 2 கோடியை எங்களுக்கு தெரிந்த நிதி நிறுவனங்கள் மூலம் வாங்கி தருவதாக கூறி அதற்கு எங்களுக்கு ரூ 25 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதற்கு ஸ்ரீதேவி சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியை போனில் அழைத்து பேசிய கௌதம் நீங்கள் கேட்ட 2 கோடி இல்லை ஒரு கோடிதான் தற்போது உள்ளது என்று கூறினார்.
அந்த ஒரு கோடி பணத்தை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து பெற்று செல்லுங்கள் என்று செல்போனில் பேசியுள்ளார். அதற்கு ஸ்ரீதேவி தனது மகன் ரமணாவிடம் நீங்கள் கேட்ட ரூபாய் 25 லட்சத்தை கொடுத்து விடுகிறேன். நீங்கள் ஒரு கோடியை கொடுங்கள் என்று கூறினார். இதையடுத்து கடந்த 25 ஆம் தேதி அன்று ஸ்ரீதேவி, ரமணா மற்றும் ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் காரில் ஈரோட்டில் உள்ள கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் கல்லூரி அருகே மதியம் போனார்கள்.
அப்போது அந்த இடத்தில் தயாராக நின்ற கௌதம், மார்ட்டின் ஆகிய 2 பேரும் ஒரு பெட்டியைக் காட்டி அதற்குள் ஒரு கோடி இருப்பதாக கூறி காருக்குள் வைத்தார்கள். அதன்பின் ரமணாவிடம் ரூ 25 லட்சம் இருப்பதாக சொன்ன பையை வாங்கிக் கொண்டு அங்கிருந்து மோட்டார் வாகனத்தில் சென்று விட்டனர். அதற்குப் பிறகு ரமணா அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணத்திற்கு பதிலாக டூத் பேஸ்ட், டூத் பிரஸ் காய்கறி தோல் வெட்டக் கூடிய கத்திகள் ஆகியன இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதேவி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். அப்போது கோவையில் மறைந்து இருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஸ்ரீதேவியிடம் கௌதம் என்ற பெயரில் நடித்தவர் கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஜனகன் என்பதும், செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய மார்ட்டின் அமல்ராஜ் என்பதும் தெரியவந்துள்ளது.
ஜனகன் வீட்டு புரோக்கராக இருந்து பழைய மோட்டார் வாகனங்களை விற்பனை செய்து கொடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். மார்ட்டின் அமல்ராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.