பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆளும் திமுக அரசு தற்போது பொங்கல் பரிசு வழங்கியது அதில் 21 பொருட்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 18 பொருட்களே இடம்பெற்றிருந்தன. மேலும் பொருட்களின் எடையும் குறைவாகவே இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான கொள்முதல் விலையாக 13,000 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதில் சுமாராக 500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலை மறைப்பதற்கு முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மக்களின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக இறங்கி வருகிறது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தினமும் ஒரு சில இடங்களுக்கு சென்று டீ குடிக்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார், இந்த வேலைதான் நடக்கிறதேயொழிய கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் காப்பாற்ற படவில்லை. இவ்வாறு பொய் வாக்குறுதி கொடுத்து திமுக அரசு ஏமாற்றுவதை தமிழக மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட மாட்டார்கள் இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள். மேலும் டெல்லியில் நடைபெற உள்ள கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தமிழக வாகனம் பங்குபெற ஏதாவது நடவடிக்கை முதலமைச்சர் சார்பில் எடுக்கலாம். ஆனால் அப்படி எதுவும் எடுக்கப்படவில்லை அதில் முதல்வர் ஆர்வம் காட்டவில்லை.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.