தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.86 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,719 பேர் உயிரிழந்திருந்தனர்.
அதிகபட்ச உயிரிழப்பாக தலைநகர் சென்னையில் 1,936 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 210 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 180 பேரும், மதுரை மாவட்டத்தில் 174 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 3,232ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆகியுள்ளது. இதுவரை இல்லாத அளவாக 5,210 குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.