கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகள் சஜிதா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பம் அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் என்று தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த வேலாயுதம் தன் மகளை மீட்டுத்தருமாறு நென்மாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்புகாரின் பேரில் அவரை எங்கு தேடியும் காவல் துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் ரகுமான் என்பவருக்கும், சஜிதாவிற்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக ரகுமானின் வீட்டில் அவரது பெற்றோருக்கு தெரியாமல் இருந்து வந்திருக்கின்றனர். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் ரகுமான் தனது அறையின் கதவை பூட்டிவிட்டு சென்றிருக்கின்றார்.
இந்நிலையில் ரகுமானின் குடும்பத்திற்கும் அவருக்கும் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் அவரது வீட்டிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் அவரது சகோதரர் இது குறித்து பாலக்காடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்த வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் ரகுமானை தேடி வந்த நிலையில் அவரது சகோதரர் அவரை அருகில் உள்ள கிராமத்தில் ஒரு பெண்ணோடு வசித்து வருவதை கண்டறிந்தார்.
இத்தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு நடத்திய விசாரணையில் 11 ஆண்டுகளாக ரகுமான் தனது தாயுடன் வாழ்ந்து வந்தது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் சமர்ப்பித்தனர். நீதிமன்றத்தில் அவர்கள் நீதிபதியிடம் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியதன் அடிப்படையில் அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அதனால் அவர்கள் இருவரும் சட்டபூர்வமாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் நென்மாராவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று திருமண ஆவணத்தில் கையெழுத்து இட்டு திருமணம் செய்து கொண்டனர்.நென்மாரா தொகுதி எம்.எல்.ஏ. பாபு அவர்கள் பதினோரு ஆண்டுகளாக ரகசிய வாழ்க்கை நடத்தி அதன் பின் சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்ட ரகுமான் சஜிதா தம்பதிகளைநேரில் சென்று வாழ்த்தினார்.