Categories
தேசிய செய்திகள்

இதுவும் கடந்து போகும்… மாற்றம் என்பது மிக விரைவில்…. சசிகலா கருத்து…!!!!!!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த உடனே மாற்றம் நிகழும் என காத்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இருந்தாலும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா இறங்கியிருக்கிறார். தொலைபேசி உரையாடல் ஆடியோக்களை வெளியிடுவது, ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை போன்ற காய்களை நகர்த்தினாலும் இதுவரை அவர் பக்கம் தொண்டர்கள் சாயவில்லை. அதற்கு மாறாக எடப்பாடி பழனிச்சாமி கையே ஓங்கி வருகிறது.

இதற்கு இடையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்தும் அவரை கட்சியிலிருந்து நீக்கியும் கடந்த 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சசிகலா மனு மீதான தீர்ப்பு வழங்கிய சென்னை 4வது  உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும் பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் இந்த தீர்ப்பு சசிகலாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் கோயில் கோயிலாக சுற்றும் பயணம் மேற்கொள்ளும் சசிகலா உறுதியான முடிவெடுத்து தடாலடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே தங்களுக்கான இருப்பை உறுதி செய்து கொண்ட அவர் பக்கம் நிர்வாகிகள் வர வாய்ப்பிருக்கிறது என அரசியல் நோக்கர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த நிலையில், மாற்றம் என்பது மிக விரைவில் ஏற்படும் என நம்புவதாக சசிகலா கூறியுள்ளார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட புகழ் பெற்ற கோயில்களில் சசிகலா வழிபாடு நடத்தியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம், சங்ககிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஏழை, எளிய மக்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஜெயலலிதாவும் அப்படியே வழிநடத்தினார். அதே வழியில்  நானும் செல்வேன். கடைக்கோடி தொண்டன் தான் ஒரு பொதுச்செயலாளரைத் தீர்மானம் செய்ய முடியும் என எம்.ஜி.ஆர். தெரிவித்துள்ளார். இந்த ஷரத்து என்பது இந்தியாவில் வேறு எந்த கட்சியிலும் கிடையாது. ஒரு இயக்கத்தை துவங்கும்போது நான்கு பேர் சேர்ந்து யாரையும் நீக்க முடியாது, நீக்கவிடவும் கூடாது என்பதற்காக விதிகள் இயற்றப்பட்டன.” என கூறியுள்ளார்.

அதிமுகவின் சட்டவிதிகள் இயற்றும் போது, கட்சித் தொண்டர்களின் ஆசைப்படிதான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று இயற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இப்போது மூன்றாவது தலைமுறை என வைத்துக் கொள்வோம். தொண்டர்களுடைய விருப்பப்படி எல்லாமே நிறைவேறும். தொடர் தோல்விகளில் இருந்து மீட்டெடுத்து ஜெயலலிதா சொன்னபடி, 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு பாடுபடும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று தமிழக மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடும். கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தான் செயல்பட முடியும், 33 ஆண்டு அனுபவத்தில் சொல்கிறேன், இதுவும் கடந்துப் போகும். ஒரே தலைமை வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. மாற்றம் என்பது மிக விரைவில் ஏற்படும் என நம்புகிறேன் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

Categories

Tech |