பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணி களம் இறங்கி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டியது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 33* ரன்களுடன் கடைசி வரை நின்று அடித்து வெற்றி தேடி கொடுத்தார்.. மேலும் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் 35 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 மற்றும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் அர்ஷ்தீப் சிங் 2 மற்றும் ஆவேஷ் கான் 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்..
இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி இருக்கின்றனர்.. சுழல் பந்துவீச்சாளர்கள் 1 விக்கெட்டும் எடுக்கவில்லை.. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இதுவே முதல் நிகழ்வாகும்.. இதற்கு முன் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர்.
இப்படி ஒரே மாதத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.. இந்த சாதனையை இனி எந்த அணியும் படைக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும்..