மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடும் இந்த வருடத்திலேயே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் இது பெருபாலான மாணவர்களை பாதித்துள்ளதால், இந்த இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என மருத்துவ மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த மனுக்களை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடுக்கான வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்ற வரையறையை மறுபரிசீலனை செய்ய தயார் என்றும், அதுவரை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறாது என்றும் மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா கடந்த நவம்பர் மாத விசாரணையின்போது தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அந்த வகையில் இவ்வழக்கின் விசாரணை 2 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் ஆஜரான துஷார் மேத்தா, மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை துவங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதில் திமுக சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், மருத்துவக் கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தகுதியை மதிப்பிடக்கூடாது என்றும் மனித விழுமியங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார். அதன்பின் அனைத்து தரப்பினரின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த ரிட் மனுக்கள் மீதான உத்தரவை (நேற்று) பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.
அந்த அடிப்படையில் நேற்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். அதேபோன்று மருத்துவம், பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அரசியல் சாசனத்தின்படி இது அனுமதிக்கக்கூடியது தான் என்று நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்தனர். மேலும் பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடித்து கலந்தாய்வை நடத்த நீதிபதிகள் அனுமதி வழங்கினர். அதேசமயம் 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து வரையறை தொடர்பாக மார்ச் 3-வது வாரத்தில் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இது தொடர்பாக கூறியபோது, மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அதிமுகவின் வலியுறுத்தலால் கிடைத்த வெற்றியை திமுக, தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தானது. மத்திய அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் 50 சதவீத ஒதுக்கீடு நிறைவேற்றம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அதிமுக குரல் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.