கேரள மாநிலம் கொல்லத்தில் மீனவர் பூக்குஞ்சு வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக கருணாகபள்ளியிலுள்ள யூனியன் வங்கியில் ரூபாய்.9 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார். எனினும் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிசெலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வட்டி மேல் வட்டி அதிகரித்தது. இதையடுத்து இறுதியில் வங்கியிலிருந்து சொத்துகளை முடக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அவரிடம் கூறப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் அவரால் வீட்டை விற்க இயலவில்லை. இந்த நிலையில் அன்று மாலை அவரது சகோதரரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அவற்றில் பேசிய அவரது சகோதரர், ஏ.இசட்.907042 என்ற எண் கொண்ட அட்சயா லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது என கூறியுள்ளார். உடனே ஓடிசென்று தன் லாட்டரி சீட்டை எடுத்து பார்த்த பூக்குஞ்சைக்கு அதிர்ஷ்டம் அடித்தது தெரியவந்துள்ளது. சென்ற 12-ஆம் தேதி கேரள அரசு வெளியிட்ட ரூபாய்.70 லட்சம் பரிசு தொகை கொண்ட அட்சயா லாட்டரி சீட்டு ஒன்றை அவர் வாங்கி இருக்கிறார். அச்சீட்டு அவருக்கு கை மேல் பலன் கொடுத்துள்ளது. அடுத்தநாள் சொத்து முடக்கத்திற்கான நோட்டீஸ் அனுப்பிய அதே வங்கிக்கு, தன் பரிசுத்தொகையை பெறுவதற்காக அவர் சென்றுள்ளார். ஏறக்குறைய ரூபாய்.10 லட்சம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ள கடன்தொகையை அடைத்துவிட பூக்குஞ்சு முடிவுசெய்துள்ளார். அத்துடன் சிறிய அளவில் தொழில் துவங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.