தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததை அடுத்து, பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை திமுக அரசு பெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்த முதலமைச்சர் பொறுப்பில் நான் உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் மக்களாகிய நீங்கள் தான், நீங்கள் அளித்து ஒவ்வொரு வாக்கும் என்னை முதல்வராக அமர்த்துவதற்கு அடித்தளமாக அமைந்தது.
நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அதில் 505 வாக்குறுதிகளில் தற்போது 202 வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் நிறைவேற்றி விட்டோம். நாங்கள் சொல்லியதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொடுத்தவர்கள். இந்திய துணைக் கண்டத்திலேயே, திமுக அரசுதான் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டிய அரசாக இருக்கும். இதை ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் எப்பொழுதும் இப்படியே தான் இருப்போம். எல்லா நாளும் இப்படியே தான் செயல்படுவோம்.
இப்போது அறிவித்தது போல, மூன்று மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களுக்கு இதை சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை பட்டியலிட்டுக் காண்பிப்பேன். வாக்களித்த மக்களை 5 ஆண்டுகள் கழித்து தானே நாம் பார்க்க போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் நான் இல்லை. என்னை இயக்கிக் கொண்டிருப்பது மக்களாகிய நீங்களும், என்னுடைய மனசாட்சியும் தான். உங்களுக்காகவே நான் காத்திருக்கிறேன்” என்று பேசியுள்ளார்