கொரோனா கிருமிகளை ஓரளவிற்கு கொல்லும் சக்தி Dentyl மவுத்வாஷில் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடைகளில் கிடைக்கும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மவுத்வாஷ் கொரோனா நோயாளிகளின் எச்சிலில் உள்ள கிருமிகளைக் கொல்லுமா என்று வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் Cetylpyridinium chloride என்ற வேதிப்பொருள் 0.07% மவுத்வாஷில் இருப்பதால் அது கொரோனா கிருமிகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் மருத்துவமனையிலும் இந்த மவுத்வாஷ் கொண்டு 12 வாரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளின் முடிவை வருகின்ற 2021ம் வருடம் தொடக்கத்தில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வானது கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் தாமஸ் என்பவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மவுத்வாஷ் சோதனைகள் நல்ல முடிவை கொடுத்துள்ளது என்றாலும், கொரோனா நோயாளிகளின் மீதான சோதனை கட்டாயம் தேவை என்று டேவிட் கூறியுள்ளார். மேலும் பல் மற்றும் வாய் தொடர்பான மருத்துவரான டாக்டர் நிக் கிளேடன் இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த சோதனை முடிவுகள், கார்டிஃப் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளபட்ட சோதனை முடிவுகளில் பிரதிபலிக்குமானால் CPC அடங்கிய Dentyl மவுத்வாஷ் மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறி விடும்.
கொரோனா தடுப்பு வழிமுறைகளான கை கழுவுதல், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றுடன் Dentyl மவுத்வாஷ் எதிர்காலத்தில் அவசியமான ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.