தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் அதனை குறை கூறி வருகின்றனர். அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மோட்டூர் ஊராட்சி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு காலதாமதமாக நேற்று வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல்பரிசு தொகுப்பில் மிளகிற்கு பதிலாக பருத்திக் கொட்டையும்,மஞ்சள் பாக்கெட்டில் கோலமாவும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதுமட்டுமல்லாமல் ரேஷன் அரிசியை அரைத்து ரவையாக கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சாலையில் கொட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அதுமட்டுமல்லாமல் நியாய விலை கடையில் பணிபுரியும் பணியாளர் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கடையைத் திறப்பதாகவும், அது குறித்து ஏதாவது கேட்டால் ஊழியர் அடாவடியாக பதில் கூறுவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நியாய விலை கடை ஊழியர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தரமான பொருட்கள் வழங்குவதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.