ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கொடூரமாக தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தானியம்பாடியின் அருகிலுள்ள வேப்பூர் செக்கடி கிராமத்தில் அம்மாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சஞ்சீவ் காந்தி என்ற மகன் இருக்கிறார். செக்கடி கிராமத்தில் குண்டும் குழியுமாக இருந்த மண் சாலைகளை சீரமைக்கும் பணிகளை சஞ்சீவ் காந்தி மற்றும் சிலர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், சர்குணம், வேடிச்சி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சஞ்சீவ் காந்தியிடம் எங்கள் நிலத்தின் வழியாக நீங்கள் எப்படி வண்டியை ஓட்டிச் செல்லலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கைகலப்பு ஏற்பட்டு இவர்கள் 4 பேரும் சேர்ந்து சஞ்சீவ் காந்தியை பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சஞ்சீவ் காந்தியை அருகிலிருந்தவர்கள் மீட்டு தானியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தானியம்பாடி காவல்நிலையத்தில் சஞ்சீவ் காந்தி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வேடிச்சி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள சர்குணம், ஸ்ரீதர் ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.